மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது அதிமுக. முதலமைச்சர் ஸ்டாலின் என்னை வேண்டும் என்றே விமர்சிப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து சாதனை படைத்தோம். 6 சட்ட கல்லூரிகளை திறந்தோம். பல்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்தோம். சேலம் மாவட்டத்தில் இந்தியாவிலே மிகப்பெரிய காலணி பூங்காவை திறந்தோம். கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காகவே திறக்காமல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது கையெழுத்திட ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம் போய்விடுமோ என டெல்டா மாவட்ட விவாசாயிகள் கவலையில் இருந்தனர். அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது அதிமுக அரசு.
2021 தேர்தலின் போது கொடுத்த 10% வாக்குறுதிகளை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. இப்படி கொல்லைப்புறமாக வந்த அரசுதான் திமுக அரசு. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு பெற்ற அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு துறைகளில் தமிழக அரசு விருதுகளை பெற்றது.
ஒரே மேடையில் விவாதம்
கருனாநிதி குடும்பத்தில் பிறக்காவிட்டால் ஸ்டாலின் வார்டு கவுன்சிலர் கூட ஆகி இருக்க மாட்டார். திறமையை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. நான் கிளை செயலாளராக இருந்து பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளேன்.திமுகவில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர யாரும் பதவிக்கு வர முடியாது.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் துணை முதல்வர் பதவி என கேட்டால் அவர் அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டு 100 மதிப்பெண்கள் பெற்றார் என்கிறார். அப்படியானால் மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவில்லையா?
நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றினேன் என துண்டு சீட்டு இல்லாமல் புள்ளி விவரங்களுடன் பேச நான் தயார். ஸ்டாலின் அவர்களே நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தீர்கள் என பேசுங்க.
தேர்தல் கூட்டணி
நீங்கள் போடுகின்ற மேடைக்கு வருகிறேன். நீங்கள் உங்களுடைய திட்டத்தை சொல்லுங்க நான் எங்கள் திட்டத்தை சொல்கிறேன். மக்களே தீர்ப்பளிக்கட்டும். அதற்கு நான் தயார். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என பேசினார்.
பாஜக பாமகவிற்கு அதிமுகவின் கூட்டணி கதவுகள் திறந்துள்ளதா என்று கேள்விக்கு, "அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். அரசியல் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும். தேர்தல் நேரத்தில்தான் யாருடன் கூட்டணி, யார் தலைமையில் கூட்டணி என்பது தெரியும்" என பதிலளித்தார்.