அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம் - தொண்டர்கள் கொண்டாட்டம்

ADMK Edappadi K. Palaniswami
By Nandhini Jul 21, 2022 05:58 AM GMT
Report

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதகரமான நிலையில் கடந்த 11- ந் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து வருவாய்துறையினர் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி,மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தனர்.

சாவியை வழங்க உத்தரவு

இதையடுத்து நேற்று பிற்பகல் வழக்கின் தீர்ப்பு வெளியானது. இதில் நீதிபதி அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போதுமான காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு அனுமதிக்க கூடாது என்றும் தீர்ப்பளித்தார்.

சீல் அகற்றப்பட்டது

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளது. சீலை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அகற்றினார். சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியின் மேனேஜரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. அதிமுக அலுவலகம் கடந்த 11ம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் மகிழ்ச்சி

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுள்ளதால், பசுமை வழிச்சாலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

admk