என்னை நேரில் சந்திக்க வராதீங்க - எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு!
எனது பிறந்த நாளில் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர்` என்ற பெயரில் அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இபிஎஸ் வேண்டுகோள்
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் தனது எக்ஸ் தள பதிவில், ”எதிர் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன். நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள்,
நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.