துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? ஸ்டாலின் வார்னிங் - பரபர தகவல்கள்
அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
இலாகா மாற்றம்
தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கைவளத்துறை அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே துரைமுருகன் கவனித்து வரும் துறைகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்தது. கன்னியாகுமரி, தென்காசி, கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.
என்ன காரணம்?
தொடர்ந்து எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி, ஆற்று மணல் விலை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஆலோசனை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டார்.
அதன்படி அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த ஆலோசனையில் எம்.சாண்ட், மணல் விலையை ரூ.1000 அளவுக்கு குறைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இதற்கிடையில் கனிமவள பிரச்சனையில் அமலாக்கத் துறையும் தற்போது தலையிட்டு வருகிறது.
ஆனால், கனிமவளத் துறையில் சில முறைகேடுகளை துரைமுருகன் தடுக்க முயற்சிக்கவில்லை என குற்றச்சாட்டு இருந்த வண்ணம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தேர்தல் நேரத்தில் அரசுக்கு அவப்பெயரை தரக்கூடும் என்பதால் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.