டுவிட்டர் பக்கத்தில் தனது பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவில் பரபரப்பு
ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கட்சியை கைபற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து பொதுக்குழு உறுப்பினர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் ஓ.பி.எஸ் அணியினர் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். கடந்து 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கூட எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும் ஓ.பி.எஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார்.
உயர்நீதிமன்றம் மறுப்பு
வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, வரும் ஜூலை 11ல் நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஓ.பி.எஸ்க்கு கடிதம் எழுதிய எடப்பாடி
நேற்று, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் எழுதிய கடிதத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர், இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை. அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும்.
நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
டுவிட்டரில் அதிமுக பொறுப்பை மாற்றிய ஈபிஎஸ்
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக பொறுப்பை மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு இருந்ததை தலைமை நிலைய செயலாளர் என்று மாற்றியுள்ளார். எடப்பாடி இப்படி தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய பொறுப்பை மாற்றியுள்ளது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? - முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை..!