பொய்கணக்கு காட்டிய செந்தில் பாலாஜியின் தம்பி - நோண்டி நொங்கெடுக்கும் அமலாக்கத்துறை!
செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் சோதனை நடத்தியதில் பொய்கணக்கு காட்டியது வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி கைது
சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் இறுதியில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து, அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜியை ஒப்படைக்க கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் தற்பொழுது அமலாக்கத்துறையின் கஸ்டடியில் உள்ளார். மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வந்தது.
அமலாக்கத்துறை சோதனை
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் ரூ.30 கோடி மதிப்பிலான அந்த நிலத்தை வெறும் ரூ.10 லட்சத்துக்கு கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி அசோக்குமார், அவரது உதவியாளர்கள் பி.சண்முகம், எம்.கார்த்திக்கேயன் ஆகியோருடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அசோக் குமாரின் மாமியார் அந்த நிலத்தை நகைகளை விற்று ரூ. 10 லட்சத்திற்கு வாங்கியதாக ஆவணங்களில் உள்ளது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நிலத்தின் உண்மையான மதிப்பு ரூ.30 கோடி என்பதும், நிலத்தை வாங்குவதற்கு ரூ.10 லட்சம் போக, மீதமுள்ள பணத்தை ரொக்கமாக வழங்கி இருப்பதும் தெரியவந்தது. தற்பொழுது அந்த 30 கோடி ரூபாய் சொத்து முடக்கப்பட்டுள்ளது.