மதுபான அதிபர்களிடம் லஞ்சம்; கெஜ்ரிவால் தான் அதற்கு மூளை - ED கொந்தளிப்பு!
மதுபான கொள்கை ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் மூளையாக செயல்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, அமலாக்கத்துறை 734 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை ஊழலில் மூளையாகவும், முக்கிய சதிகாரராகவும் இருந்தார்.
ED பதில் மனு
மதுபான கொள்கையில் மதுபான அதிபர்களுக்கு சலுகைகள் காட்டியதற்கு பிரதிபலனாக 'சவுத் குரூப்' என்ற மதுபான அதிபர்கள் குழுவிடம் அரவிந்த் கெஜ்ரிவால் லஞ்சம் கேட்டார். லஞ்சமாக கிடைத்த பணத்தின் ஒருபகுதியான ரூ.45 கோடியை கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கோவா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்.
அந்த தேர்தல் பிரசார பணிகளுக்கு ஆம் ஆத்மி ஈடுபடுத்திய நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, தங்களுக்கு ரொக்கமாக பணம் கொடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஆம் ஆத்மி ஈடுபட்டிருப்பது தெளிவாகிறது.
கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவில் முகாந்திரம் இல்லை. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவின் விசாரணை அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.