மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? இல்லை கல்லா? துரைமுருகன் ஆவேசம்
மத்திய அரசுக்கு இருப்பது இதயமா கல்லா என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
துரைமுருகன்
வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதிதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்வு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நந்த குமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா துணைமேயர் சுனில் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
கருணாநிதி
அப்பொழுது அவர் பேசியதாவது, வேலூர் மாவட்டத்தில் 22 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு காலத்தில் பேருந்துகள் தனியார் வசம் இருந்த பொழுது தனியார் பேருந்துகளில் முதலாளிகள் வைப்பதே சட்டமாக இருந்தது.
அதன் பின்னர் அண்ணா ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது தான் இந்த துறை செம்மைப்படுத்தப்பட்டது. அப்பொழுது தான் ஒவ்வொரு பேருந்திலும் வள்ளுவர் படமும், திருக்குறளும் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார் என பேசினார்.
அண்ணாமலை
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நானும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவர் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த அளவுக்கு கூட விவரம் இல்லை என இப்போது தான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது என பதிலளித்தார்.
மேலும், வயநாடு நிலச்சரிவு இதயம் உள்ளவர்களை எல்லாம் உருகவைத்து, அழவைத்த துயர சம்பவம். ஆனால் அதைக்கூட நாங்கள் பேரிடராக அறிவிக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியிருப்பது அவர்களிடத்தில் இருப்பது இதயமா? கல்லா என தெரியவில்லை என கூறினார்.