வயநாடு நிலச்சரிவுக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை -அமைச்சர் துரைமுருகன்!
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் கிடையாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வயநாடு
கேரளாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் மண்ணின் ஆழமான பகுதியில் புதைந்துள்ள உடல்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதையடுத்து டெல்லியில் இருந்து நவீன ரேடார் கருவிகள் கொண்டு வரப்பட்டது.
தற்போது இந்த ரேடார் கருவிகளைக் கொண்டே மண்ணில் புதைந்துள்ள நபர்களை தேடும் பணியில் தொடர்ந்து மீட்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவு தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .
மத்திய அரசு மறுப்பு
அப்போது பேசிய அவர் ,'' அதில், வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்க வைத்துள்ளதாகவும், இந்த பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததன் மூலம் அவர்களுக்கு இருப்பது இதயமா அல்லது கல்லா என தோன்ற செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனிம வளத்தை தமிழ்நாடு எடுத்து விட்டதால்தான் வயநாட்டில் இந்த பேரழிவு ஏற்பட்டதாக சிலர் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வயநாடு நிலச்சரிவுக்கு தமிழ்நாடு காரணம் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.