டங்ஸ்டன் சுரங்கம்; எதிர்ப்பு தெரிவிக்காததன் காரணம் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
இந்த பகுதியில் சுரங்கம் அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சிகள் மற்றும் சூழலிய அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசு அறிக்கை
இதனையடுத்து இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். திமுக அரசு இந்த விவகாரத்தில் நாடகமாடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
மேலும் இது தொடர்பாக மத்திய அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் விடும் பணிகள் தொடங்கியது. ஆனால், 2024 நவம்பர் 7ஆம் தேதி ஏல முடிவை அறிவிக்கும் வரை தமிழக அரசிடமிருந்து எதிர்ப்பு வரவில்லை என தெரிவித்துள்ளது.
துரைமுருகன் விளக்கம்
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 03.10.2023 அன்று மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், சுரங்க அமைச்சகத்தின் ஏலம் எவ்வாறு அடிப்படைக் குறைபாடுடையது என்பதையும், ஏலத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், அதை மாநில அரசு மட்டுமே கையாள வேண்டும் என்பதையும் நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் கடிதத்தில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக், அரிட்டாப்பட்டியின் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியதாக சுரங்கத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததே தவிர நில விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. அந்த பகுதியில் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளம் இருப்பது தெரிந்தும் சுரங்க அமைச்சகம் ஏலத்தில் இறங்கியுள்ளது.
ரத்து செய்ய வேண்டும்
ஏல அறிவிப்புக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளை அறிந்தவர்கள் அதை நன்கு அறிவார்கள். அது வீண் முயற்சிதான். தற்போது சுரங்க அமைச்சகமும் ஏலம் விட முடியும் என்றாலும், சுரங்கத்திற்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க வேண்டிய நிலையில், மாநில அரசுக்கு மட்டுமே வருவாய் சேரும் போது, மாநில அரசின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு ஏலத்தில் இறங்கியது ஏன்?
தமிழக முதலமைச்சர், பிரதமரிடம் இந்தப் பிரச்சனையை எடுத்துக் கூறியதையடுத்து, சுரங்கத்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கனிம ஏலம் வழங்குவதை மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.