விரக்தியில் பாஜகவினர் சாதி மத அரசியலை பேசுகிறார்கள் - துரை வைகோ விமர்சனம்
பிரதமர் மோடி உள்பட பாஜகவின் தலைவர்கள் தங்களின் தோல்விக்கான காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என துரை வைகோ விமர்சித்துள்ளார்.
துரை வைகோ பார்வை
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் இயந்திரங்கள், வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகின்றனவா? என்பதை திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ, நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும் போது, இந்த மையத்தில் எக்குறையும் இல்லை என்று தெரிவித்து போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் உள்ளனர் என்றும் சிசிடிவி கேமராக்களும் சரியாக இயங்குகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமருக்கான தகுதியுடன் மோடியின் செயல்பாடு பேச்சு போன்றவை இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய துரை வைகோ, ஆனால், அவரின் பேச்சுக்கள் பிரிவினையைத் தூண்டும் வகையிலும், சாதி, மதங்களை வைத்து வாக்கு சேகரிக்கும் வகையிலும் இருக்கின்றது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
விரக்தி
நாட்டில் எந்த இந்தியப் பிரதமரும் இதுவரை பிரச்சாரம் செய்ததில்லை என தெரிவித்த துரை வைகோ, சாதி மதம் போன்றவற்றை வைத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதிமுறை இருக்கின்ற நிலையிலும் தொடர்ந்து அவ்வாறு பிரச்சாரங்களை அவர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இந்தியா கூட்டணிக்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது என நம்பிக்கை தெரிவித்து, அதன் காரணமாகவே விரக்தியில் நரேந்திர மோடி உட்பட பாஜகவின் தலைவர்கள் சாதி மதங்களை வைத்து பிரச்சாரம் செய்து பொய்களை பரப்பி வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.