அண்ணாமலை - உங்களால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியுமா..? துரை வைகோ சவால்
வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழகத்திலும் சூடு பிடித்துள்ளது.
துரை வைகோ சவால்
மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ திருவண்ணாமலையில் நடைபெற்ற மதிமுக நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்று கொண்டார்.
கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை சராசரியான அரசியல்வாதி இல்லை என்றும் அவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி அவர் அரசியல் வருவது நல்லது என பலர் நினைத்த நிலையில், அவர் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் என விமர்சித்தார்.
அண்ணாமலை தொடர்ந்து தவறான அறிக்கைகள், தரவுகளை கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று சாடிய துரை வைகோ, அவருடைய செயல்பாடுகளால் பாஜகவும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
1 தொகுதியில்..
தமிழகத்தில் தங்கள் கட்சிக்கு எழுச்சி உள்ளதாக பாஜகவினர் கூறும் நிலையில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணியிலோ தனித்தோ தேர்தலில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் என்று பகிரங்க சவால் விடுத்தார்.
அப்படி அவர் வெற்றிபெற்றால் பாஜகவுக்கும், அதனை ஆதரிக்கும் இந்து அமைப்புகளுக்கும் தமிழகத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கின்றது என தெரியவரும் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.