அப்பல்லோவில் வைகோ அனுமதி - உடல்நிலை குறித்து துரைவைகோ தகவல்!
இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். அம்மா ரேணுகா அவர்களின் உடல் நலனையும் கேட்டறிந்தேன்.
இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களும் எனது அன்புத் தாயார் ரேணுகா அம்மா அவர்களும் உடல் நலன் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பாகவே மக்கள் சந்திப்பிற்காகவும், கழக தோழர்களின் இல்லத் திருமணத்தில் பங்கேற்கவும்,
நேற்று முழு நாளும் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டடப்பட்ட பல்வேறு பொது நல திட்டங்கள் திறப்பு விழாவில் பங்கேற்கவும் ஒப்புதல் அளித்த நிலையில் நான் எனது பணியை தொடர்ந்தேன். நேற்றைய விழாவில் பங்கேற்ற அன்புச் சகோதரர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேசும்போது கூட,
தலைவர் வைகோ அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதால் நான் இந்த நிகழ்ச்சியை மற்றொரு நாளுக்கு மாற்றி வைத்துக் கொள்ளலாமா என்று MP அவர்களிடம் கேட்டபோது, உடனே அதை மறுத்து, இல்லை மக்கள் பணியே முன்னுரிமை என்று கூறி இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என்று, என்னை வாழ்த்தியும், பாராட்டியும் பேசினார்.
அப்படி ஒப்புக்கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும், பணிகளையும் முடித்துவிட்டு, இன்று (07.10.2025) காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நான், நேரடியாக அப்பல்லோ மருத்துவமனை சென்று, இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களையும், என் அன்புத் தாயார் ரேணுகா அம்மா அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்து, மருத்துவர்களிடம் அவர்களின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன்.
தலைவர் வைகோவிற்காகவும் எனது தாயார் ரேணுகா அம்மா அவர்களுக்காகவும் அக்கறை கொண்ட கழகத் தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும், மரியாதைக்குரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர், தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதல்வர், இனிய சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,
இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் அண்ணன் ஆர்.முத்தரசன் அவர்கள், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் அண்ணன் மு.வீரபாண்டியன் அவர்கள், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அண்ணன் கு செல்வப் பெருந்தகை அவர்கள், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்கள், அதிமுக முன்னோடிகளுள் ஒருவரான அண்ணன் செங்கோட்டையன் அவர்கள்,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா அவர்கள் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். Influenza AB என்ற கடும் தொற்று ஏற்பட்டுள்ளதால் தலைவர் வைகோ அவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பார்வையாளர்களை தவிர்க்குமாறு மருத்துவ குழுவினர் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஆகவே தலைவர் வைகோ அவர்கள் மீது அன்பு கொண்ட நெஞ்சங்கள், கழக நிர்வாகிகள் எவர் ஒருவரும் பார்வையிடுவதை தவிர்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். தலைவர் வைகோ அவர்களும் அம்மா ரேணுகா அவர்களும், நலம் பெற்று வருகிறார்கள். விரைவில் வீடு திரும்புவார்கள் என்பதையும் இப்பதிவில் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு அனைவரும் நலம் விசாரிக்கலாம் என்பதை அன்புடன் வேண்டுகிறேன் என மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.