'இத்தோட நிறுத்திக்கணும்' - துரைமுருகனிடம் நேரில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

Tamil nadu DMK Vellore
By Jiyath Mar 27, 2024 07:07 AM GMT
Report

திமுக மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார். 

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி 

திமுக மேடைப்பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில் பெயர் போனவர். ஆளுநர் ஆர்.என். ரவி முதல் பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வரை, இவர் தரக்குறைவாக பேசிய பேச்சுக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதனிடையே கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக தலைமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி எதிர்காலத்தில் இதுபோல அநாகரிகமாக பேசக்கூடாது என கூறி ஜூலை மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

பயிற்சி மையத்தில் சேராமலேயே 22 வயதில் சாதனை - யார் இந்த அனன்யா IAS?

பயிற்சி மையத்தில் சேராமலேயே 22 வயதில் சாதனை - யார் இந்த அனன்யா IAS?

துரைமுருகன் அறிவுரை 

இதனையடுத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

அதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் "எதிர்க்கட்சி வேட்பாளரை கண்ணியமற்ற முறையில் பேசக்கூடாது. நமது கொள்கையை நாம் சொல்லவேண்டும் தவிர, இன்னொருவரை இழுவுப்படுத்தி பேசுவது கழகத்திற்கு உகந்ததல்ல. தம்பி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இனி எந்த இடத்திலும் எதிர்த்து நிற்பவர்களை தகாத வார்த்தையால் பேசக்கூடாது. பேசும்போது நமது கருத்துகள் பதிவாக வேண்டுமே தவிர, வார்த்தைகள் தடிப்பாக இருக்கக்கூடாது. இது அவருக்கு மட்டுமல்ல, பேசுகிற அனைவருக்கும் தான்" என்று துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.