காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு - பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை!
காற்று மாசு அதிகரிப்பால் டெல்லி முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கடந்த சில வாரங்களாகவே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பலர் மூச்சுத் திணறல் உட்பட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் மாணவர்கள் நலன்கருதி டெல்லி முழுவதும் தொடக்கப் பள்ளிகளுக்கு நவம்பர் 10ம் தேதி வரை விடுமுறை அறிவித்து டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வித் துறை அமைச்சர் அதிஷி கூறியதாவது "தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளை நவம்பர் 10ம் தேதி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிகரிப்பு
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index – AQI) கடந்த 4ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், நேற்று (5ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆக மோசமடைந்தது.
மேலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் அரசு பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான வரம்பைவிட, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பலமடங்கு மோசமான நிலையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.