டெல்லியில் இனி ஆளுநர் தான் அரசாங்கம் - சர்ச்சைக்குரிய புதிய சட்டம் அமலுக்கு வந்தது
டெல்லியில் இனி துணை நிலை ஆளுநர் தான் அரசாங்கம் என்கிற சர்ச்சைக்குரிய சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்த ஆறு வருடங்களாக மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது.
டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லை மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்கிற விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்தது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் வாங்க வேண்டியது இல்லையென்றும் தெரிவித்திருந்தது.
சமீபத்தில் மத்திய அரசு மீண்டும் புதிய சட்டத்தை இயற்றியிருந்தது. அதன் படி டெல்லியில் துணை நிலை ஆளுநர் தான் அரசாங்கம் எனக் கூறும் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்தை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இயற்றியது.
இந்த நிலையில் அந்த சட்டம் தற்போது ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்துள்ளது.