கொடுமைப்படுத்திய குடிகார மகன் - கட்டையால் அடித்து கொன்றுவிட்டு பெற்றோர் ஆடிய நாடகம்!
குடித்துவிட்டு டார்ச்சர் செய்த மகனை பெற்றோர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் குடி பழக்கம்
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளிக்கு அடுத்து உள்ள தாட்கோ பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் - சாந்தாமணி. இந்த தம்பதியின் மகன் மணிகண்டன், 26 வயதான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். குடிப்பழக்கத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தார், இவரது பெற்றோர் தான் தினக்கூலிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர்.
மணிகண்டன் குடிபோதையில் ஒரு வாரமாக பெற்றோரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் மன உளைச்சலுக்கு ஆளானர், இதேபோல் நேற்று மீண்டும் குடிபோதையில் வந்து தாய் தந்தையுடன் ரகளையில் ஈடுபட்டார்.
பெற்றோர் நாடகம்
இந்நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோர் ஒரு கட்டையால் அடித்து தன் மகனை கொலை செய்துள்ளனர், இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, இந்த கொலையை மறைப்பதற்காக தனது மகனை யாரோ இரண்டு பேர் கொலை செய்து இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் முன் போட்டுவிட்டு சென்றதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் விசாரணையில் செல்வராஜை போலீசார் கேட்டபொழுது மகன் மது போதையில் வந்து கொடுமைப்படுத்தியதால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதற்கு இவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார், இதனையடுத்து போலீசார் கொலை வழக்கில் இவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.