சால்னா வாங்கி தராதது ஒரு குத்தமா... போட்டோகிராபரை கத்தியால் குத்திய போதை ஆசாமிகள்
பரோட்டாவுக்கு சால்னா வாங்கி தராததால் போட்டோகிராபர் ஒருவரை போதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
போட்டோகிராபர்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(26). இவர் ஒரு ஸ்டுடியோவில் புகைப்பட நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு தன்னுடைய உறவினரை சந்திக்க அருகே உள்ள டெம்பிள் சிட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் மதுபானம் அருந்தி கொண்டிருந்த ஐந்து நபர்கள் விக்னேசை மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பரோட்டாவுக்கு சால்னா?
வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த ஐந்து பேரும் சேர்ந்து விக்னேஷை சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த விக்னேஷை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு விக்னேஷ் அனுப்பப்பட்டார். இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக டெம்பிள் சிட்டி பகுதியை சேர்ந்த ஹரீஷ், கன்னியப்பன் என்ற தனுஷ், சரவணன், எல்லப்பன், பெரிய தனுஷ் ஆகிய ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சரமாரி தாக்குதல்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போதை ஆசாமிகள் விக்னேஷை அழைத்து பரோட்டா சாப்பிடுவதற்கு சால்னா வாங்கி வந்து கொடு என கட்டாயப்படுத்தி உள்ளனர்.
அதை செய்ய மறுத்ததற்காக நேற்று இரவு விக்னேஷ் செல்லும்போது அந்த ஐந்து பேரும் சேர்ந்து இவரை தாக்கி வஞ்சம் தீர்த்துக் கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.