பொக்கை வாயுடன் பளீரென சிரித்த பாட்டியை படம் பிடித்த கலைஞர் - ஒரே நாளில் ட்ரெண்டான சுவாரஸ்யம்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர், அரசு தொகுப்பு வாங்கிய பொக்கை வாய் சிரிப்போடு ஒரு பாட்டியின் போட்டோவை பகிர்ந்தார்.
இந்த போட்டோ பட்டித்தொட்டியெங்கும் பரவி ட்ரெண்டானது. இந்த புகைப்படத்தை பாராட்டாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். என்ன ஒரு மகிழ்ச்சி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் வேலம்மாள் (90). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். மகன் திருப்பூரில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
90 வயதாகும் வேலம்மாள் தமிழக அரசு அறிவித்த 2000 ரூபாயை வாங்கி விட்டு வரும் போது, அங்கு சென்ற அவரை புகைப்படம் எடுத்த நாளிதழ் போட்டோகிராபர் ஜாக்சன் மெல்ல பேச்சு கொடுத்து வாங்கிய ரூபாயை காமிங்க பாட்டின்னு கேட்க, உடனே கையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மற்றும் பொக்கை வாய்சிரிப்புடன் பார்க்க, அதனை அவர் போட்டோ எடுத்தார். இந்த போட்டோ தான் சமூகவலைத்தளத்தில் மிகப் பெரிய ட்ரெண்டானது.
இது குறித்து பாட்டி வேலம்மாள் கூறுகையில், எனக்கு ஒரு வீடு வேணுமய்யா... நான் தெருவிலேதான் படுத்து தூங்குறேன். இந்த காசுல நான் 70 ரூபாய்க்கு சோறு வாங்கி தின்னேன், சேலை கடை மட்டும் திறக்கட்டும், சேலை, ஜம்பர் வாங்க போறேன் என்று கள்ளம் கபடம் இல்லாமல், குழந்தை போன்று பேசியது சமூகவலைத்தளத்தில் பரவி மிகப் பெரிய அளவில் டிரெண்டானது.
இந்த புகைப்படத்தை எடுத்த நாளிதழ் போட்டோகிராபர் ஜாக்சன் ஹெர்பி கூறியதாவது -
நான் பள்ளியில் படிக்கும்போதே எனக்கு சரியா படிப்பு வரல. ஆனால் போட்டோ எடுக்கற ஆர்வம் நன்றாக இருந்தது. புகைப்படம் எடுத்து சிறந்த சாதனையாளராக வரணும்னு என்பதுதான் என் ஆசை. ஆனா என் கிட்டே கேமிரா கிடையாது.
அப்பாகிட்டே கேமிரா வாங்கித் தர சொன்னேன். வீட்டின் முன்னால் இருந்த 1 சென்ட் இடத்தை விற்று எனக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கு கேமிரா வாங்கி கொடுத்தார். நீ எடுக்கற போட்டோவை உலகமே பேசணும்னு என்று சொன்னார்.
நான் எடுத்த இந்த பாட்டியின் போட்டோவை பார்த்து என்னை பாராட்டாத நபர்களே இல்லை ஆனால் என்னோட அப்பாதான் இப்ப உயிரோடு இல்லை என்று தழு, தழுத்த குரலில் கண்ணீருடன் பேசினார்.
நான் எடுத்த பாட்டியின் புகைப்படத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு செய்தது எனக்கு மிகப்பெரிய மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது. தமிழக முதல்வருக்கு ஒரு நாளாவது புகைப்பட கலைஞராக ஆகணும்னுதான் என் ஆசை என்றார்.
பின்பு, செய்தியாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 5,000 ரூபாயில், 2 ஆயிரம் ரூபாயை அந்த வேலம்மாள் பாட்டிக்கு கொடுத்து ஆசி வாங்கினார் ஜாக்சன்.