உறுதி மொழி ஏற்பது சடங்காக மாறிவிட்டது- முதல்வர் ஸ்டாலினை விளாசிய அன்புமணி!
போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பது சடங்காக மாறிவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
உறுதிமொழி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாள் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 11-ஆம் நாள் நடைபெற்ற 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன் என்று ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் உறுதி எடுத்துக்கொண்டாலே போதும்அதுவே முதல் வெற்றி.
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் போன்ற இடங்களில் போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும் என்று ஆணையிட்டார்.
முதலமைச்சரின் இந்த ஆணையை செயல்படுத்தியிருந்தாலே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருள்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை.
அன்புமணி
ஏன் செய்யவில்லை என காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கேட்கவில்லை. இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரியைப் போலச் செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஆனால், அவரே அதை மறந்து விட்டார். போதைப்பொருள்களை தடுப்பதற்கான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. சட்டங்களைத் திருத்த இருக்கிறோம்; சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம்; போதை மருந்து விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன;
போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு தனி உளவுப்பிரிவு ஏற்படுத்தப்பட இருக்கிறது என்றெல்லாம் முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரு சிலரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும்.
அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்வதை வெறும் சடங்காக செய்வதால் எந்த பயனும் இல்லை.
எனவே, இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.