சரமாரியாக தாக்கிக்கொண்ட ஓட்டுநர்கள்; கம்பியை பிடித்து எட்டி மிதித்த நடத்துநர் - பரபரப்பு!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர் ஆகியோர் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகராறு
சென்னை கொரட்டூரில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மாநகர பேருந்து ( தடம் எண் 70) கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இந்த பேருந்தை சிவானந்தம் என்பவர் ஓட்டினார்.
அப்போது அங்கு முன்னால் நின்ற மற்றோரு மாநகர பேருந்தை எடுத்து வழிவிடுமாறு சிவானந்தம் கூறினார். அதற்கு அந்த மாநகர பேருந்தின் ஓட்டுநர் புண்ணியமூர்த்தி என்பவர் மறுத்ததாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, எதுவாக இருந்தாலும் பேருந்துக்குள் வந்து பேசும்படி சிவானந்தம் கூறினார். உடனே ஓட்டுநர் புண்ணியமூர்த்தி, அந்த பேருந்தின் நடத்துநர் பாலகுமார் இருவரும் பேருந்துக்குள் எறியுள்ளனர்.
மோதல்
அவர்கள் ஏறியதும் ஓட்டுநர் சிவானந்தம் பேருந்தின் தானியங்கி கதவை மூடிவிட்டு அங்கிருந்து பேருந்தை எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் புண்ணியமூர்த்தி மற்றும் நடத்துநர் பாலகுமார் இருவரும் சேர்ந்து ஓட்டுநர் சிவானந்தத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அப்போது நடத்துநர் பாலகுமார், பேருந்தின் கம்பியை பிடித்து தொங்கியபடி சிவானந்தத்தை காலால் எட்டி உதைத்தார். பயணிகள் கண் முன்பே மாநகர பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர் ஆகியோர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.