மரித்த மனிதநேயம் - உயிருக்கு போராடியவரை சாலையோரம் வீசிச்சென்ற டிரைவர், கிளீனர்!
பேருந்து மோதி படுகாயமடைந்த வாலிபரை சாலையோரம் வீசிவிட்டு சென்ற மனிதநேயமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாலிபர் படுகாயம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலைய நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் மீது பேருந்து ஒன்று மோதிவிட்டு சென்றது. இதில் படுகாயமடைந்து கிடந்த வாலிபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
கொடூர செயல்
அதில், கர்நாடகா மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பேருந்து வாலிபர் மீது மோதியதும், இதில் படுகாயமடைந்த வாலிபரை பேருந்தின் ஓட்டுநர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோர் தூக்கி சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஓட்டுநர் சிவராஜ், கிளீனர் சரவணன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய பேருந்தையும் பறிமுதல் செய்தனர். படுகாயமடைந்த வாலிபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல், சாலையோரம் வீசிவிட்டு சென்ற மனிதநேயமற்ற இந்த கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.