மேயர் காருக்கு வழிவிடாத பேருந்து ஓட்டுநர் கைது - பரபரப்பு சம்பவம்!
பெண் மேயர் காருக்கு வழிவிடாமல் அரசு பேருந்தை ஒட்டிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேயர் ஆர்யா
கேரளா, திருச்சூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அரசு அதிவிரைவு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது, இரவில் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் கார், பேருந்துக்கு பின்னால் வந்துள்ளது.
அந்த நேரத்தில் மேயர் காருக்கு வழிவிடாமல் ஓட்டுநர் பேருந்தை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வளைந்து சென்றுள்ளார். உடனே பேருந்தை வேகமாக முந்திச் சென்ற மேயர் கார் அந்த பேருந்தை மறித்துள்ளது.
ஓட்டுநர் கைது
தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய மேயர் ஆர்யாவும், அவரது சகோதரனும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மேயர் ஆர்யா அங்கு வந்த போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஓட்டுநர் தீபுவை கைது செய்தனர்.
மேலும், தன்னுடைய பணிக்கு இடையூறு செய்ததாக மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது ஓட்டுநர் புகாரளித்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து கேரள மாநில சாலை போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.