இந்திய இளம் மேயருக்கு திருமணம் - கிஃப்டிற்கும், மொய்க்கும் நோ சொன்ன தம்பதி!

Kerala Marriage Viral Photos
By Sumathi Sep 04, 2022 02:11 PM GMT
Report

இந்தியாவின் இளவயது மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு எளிய முறையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

கேரள மேயர்

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படித்துக் கொண்டிருந்த இவரை திருவனந்தபுரம் மேயர் ஆக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது மார்க்சிஸ்ட் கட்சி.

இந்திய இளம் மேயருக்கு திருமணம் - கிஃப்டிற்கும், மொய்க்கும் நோ சொன்ன தம்பதி! | The Wedding Of India Youngest Mayor

இந்தியாவிலேயே இளவயது மேயரான ஆர்யா ராஜேந்திரனுக்கும், கேரளத்தின் பாலிச்சேரி தொகுதியின் எம்எல்ஏ சச்சின் தேவ்க்கும் இன்று திருமணம் நடந்தது. கேரள சட்டமன்றத்திலேயே மிகவும் இளையவரான சச்சின் தேவ்க்கு இப்போது 28 வயதே ஆகிறது.

 திருமணம்

சட்டப் பட்டதாரியான சச்சின் தேவ், இந்திய மாணவர் சங்கத்தின் கேரள மாநில செயலாளராகவும், தேசிய இணை செயலாளராகவும் உள்ளார். கோழிக்கோடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தபோது கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவராகவும் இருந்தார்.

மேயர் ஆர்யா ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குழந்தைகள் பிரிவான பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகவும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இருவரும் ஒரே அரசியல் சிந்தாந்தம் கொண்டவர்கள் என்னும் அடிப்படையில் வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

 முதலமைச்சரின் நிவாரண நிதி

கடந்த ஆண்டே நிச்சயிக்கப்பட்ட இவர்களின் திருமணம் திருவனந்தபுரம் ஏ.கே.ஜி சென்டரில் இன்று நடந்தது. மேலும், இந்த திருமணத்திற்கு வருபவர்கள் பரிசு பொருட்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

அதேபோல, மொய் அளிக்க விரும்புவோர் அந்த பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கும், முதியோர் இல்லங்களுக்கும் வழங்குமாறும் மணமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தன் மனைவி, மகள் வீணா, மருமகனும் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்பட குடும்பத்தினரோடு வந்து கலந்து கொண்டார்.

இதேபோல் முக்கிய அரசியல் தலைவர்கள் நூற்றுக்கணக்காணோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.