அதானி குழுமம் மீது தயவு தாட்சனையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் - கொந்தளித்த கிருஷ்ணசாமி!
அதானி குழுமம் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.
அதானி குழுமம்
அதானிக் குடும்பத்தின் மீதான 2200 கோடி ஊழல் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்பிற்கு பெரும் பங்கம் விளைவித்துள்ளது. அதானி குறித்து குற்றச்சாட்டை ஹிண்டன் பர்க் கடந்த வருடம் கூறிய பொழுது அது CIA சதி என்று கடந்து போய் விட்டோம்.
ஆனால், இந்த முறை அமெரிக்க அரசு அதானியின் முறைகேட்டைச் சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, பல ஆதாரங்களுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதானி குடும்பத்தின் சூரிய ஒளி மின் நிறுவனத்திலிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னரே அம்மாநிலங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதானி கம்பெனியின் சோலார் மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்ததால் பல மாநில அரசுகள் வாங்க மறுத்துவிட்டன. எனவே பின்னர் மத்திய, மாநில அரசு அதிகாரிகளை ஊழல் படுத்தி அதிக விலைக்கு அதானி குடும்பம் தனது சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைத்துள்ளனர்.
மேலும், இதன் மூலம் அதானி கம்பெனியின் வர்த்தகத்தை மிக உயர்த்திக் காட்டி அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை ஈர்த்து உள்ளனர். அமெரிக்க நாட்டின் சட்டப்படி, இது மிகப்பெரிய குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன.
இக்குற்றச்சாட்டுகளுக்கும் சாதாரண மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எவரும் ஒதுங்கிப் போய் விட முடியாது. இப்போது சர்வதேச அளவில் முதல் பணக்காரர் என்ற நிலை மாறி, சர்வதேச அளவில் மிகப் பெரிய ஊழல்வாதி -குற்றவாளி என்ற நிலைக்கு அதானி தள்ளப்பட்டு இருக்கிறார்.
மத்திய அரசு
அதானி குழுமம் மீது மத்திய அரசு முறையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதானியை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யக் கூடாது. இது 140 கோடி மக்களின் உலக அளவில் நன்மதிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; அவர்களின் நலன் சார்ந்த விஷயமுமாகும்.
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 10 வருடங்களாக அதானிக் குடும்பத்திடமிருந்து கூடுதல் விலைக்கே சூரிய ஒளி மின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.எனவே, தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
ஏழை, எளிய மக்களின் மீதான மின்சுமை அதிகரிக்கக் காரணமான அதானி குடும்பத்தின் அனைத்து ஊழல் நடவடிக்கைகளையும் முழுமையாக விசாரிக்க; உயர்மட்ட விசாரணைக்கு அமைக்க வேண்டும்; அமெரிக்க அரசின் அதானி பிடிவாரண்டிற்கு தடை கேட்கக் கூடாது.
கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தியாவின் அடையாளங்கள் அல்ல.! மாறாக அவமானச் சின்னங்களாக மாறி வருவது தடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.