அதானி லஞ்ச வழக்கு - அமெரிக்காவை தொடர்ந்து செக் வைத்த கென்யா
அதானி குழுமத்துடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்யா அறிவித்துள்ளது.
கெளதம் அதானி
பிரபல தொழிலதிபர் கெளதம் அதானி இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்து முறைகேடாக பெற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கெளதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
ராகுல் காந்தி கண்டனம்
இந்த விவகாரம் அரசியல் மற்றும் பங்கு சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதானியை இந்திய அரசு கைது செய்து விசாரிக்க வேண்டும், அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார், முறைகேடாக அதானி சம்பாதிக்கும் பணத்தில் பாஜகவிற்கு நன்கொடை வழங்குகிறார் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
மேலும், இந்த குற்றச்சாட்டு காரணமாகக் பங்கு சந்தையில் அதானி குழும பங்குகள் 20% வரையில் சரிந்து 2.2 லட்சம் கோடி ரூபாய் வரையிலான சந்தை மதிப்பீட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
கென்யா
தற்போது அதானி நிறுவனத்துடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார். கென்யாவின் பிரதான விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தம் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் வகையிலான 736 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. கடந்த மாதம்தான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அமெரிக்கா நீதித்துறையின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும், இதை சட்ட ரீதியில் சந்திப்போம் என்றும் அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.