பொண்ணு மட்டும் குடுத்தா போதும் - நூதன பிரச்சாரத்தில் இளைஞர்கள்!
வரதட்சணையை எதிர்த்து இளைஞர்கள் இருவர் நூதன பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
வரதட்சணை ஒழிப்பு
கன்னியாகுமரி, வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெனிஷ் மற்றும் சுமிஷ். இவர்கள் இருவரும் வித்தியாசமான காமெடி நிகழ்ச்சிகளை மேற்கொண்டு இணையத்தில் பகிர்ந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்நிலையில், நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில் திடீரென இருவரும் நூதன முறையில் ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதில் இருவரும் மணமகன் கோலத்தில் கழுத்தில் விளம்பர பலகையை தொங்கவிட்ட வண்ணம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
மணமகள் தேவை
மேலும் அந்த பலகையை காட்டி திருமணம் செய்வதற்கு மணமகள் இருக்கிறார்களா எனக் கேட்டுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கவிடப்பட்ட அட்டையில், மணமகள் தேவை என்ற தலைப்புடன் வரதட்சணையாக கார், தங்கம், பணம் போன்றவை தேவையில்லை, சாதி, மதம் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அங்கு இருந்த இளைஞர்களிடம் வரதட்சணை கேட்கக் கூடாது, பணத்தைவிட குணத்தை எதிர்பார்த்து பெண்களை தேர்ந்தெடுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த பிரச்சாரம் குறித்து இரு இளைஞர்களும் கூறுகையில்,
நூதன பிரச்சாரம்
தாங்கள் கை நிறைய சம்பளம் வாங்கும் பொறியியல் பட்டதாரி எனவும் சாதாரணமாக வரதட்சணை வாங்கக்கூடாது, வரதட்சணை ஒழிக என்றெல்லாம் நாம் முழக்கங்கள் எழுப்பி பிரச்சாரம் செய்தால் கிண்டலாக பொதுமக்கள் பார்க்கும் நிலை உள்ளதால்,
 மணமகன் கோலத்தில் மக்களை ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரிவித்தனர். தங்களது முயற்சி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுகோலாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினர். இவர்களது முயற்சி தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    