ஆடி அமாவசை... என்னென்ன செய்யலாம்? தவிர்க்கலாம்?
ஆடி மாதம் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை தினமான இன்று பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். சென்னை கபாலீஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராக சுவாமி கோவில், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மயிலாடுதுறை காவிரி, ஈரோடு பவானி உள்ளிட்ட நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
தர்ப்பணம்
இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, அவரவர் வழக்கப்படி காலைப் பொழுதின் வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவது நன்று.ராமேஸ்வரம், கங்கை, காவிரி, பவானி கூடுதுறை முதலான நீர் நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள், புண்ணிய நதிகளுக்குச் சென்று நீராடி, புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.
வீட்டில் இருந்தபடியே, முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்யலாம்.
தவிர்க்கலாம்
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக் கூடாது. திதி, சிராத்த, தர்ப்பணக் காலங்களில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது.
தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரிலிருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது.
அதே போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும்தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.