அதிபர் பைடன் உரை; ஒன்றுமே புரியவில்லை..கிண்டலடித்த டொனால்ட் டிரம்ப்!
அதிபர் பைடன் உரையை டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
பைடன் உரை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்து நாட்டு மக்களிடம் விளக்கமளித்திருந்தார். இதனை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கூறியதாவது, “பைடனின் உரையில் பெரிதாக ஒன்றும் புரியவில்லை. சிலவற்றை தான் புரிந்துகொள்ள முடிந்தது. அது மிகவும் மோசமாக இருந்தது. பைடனும், கமலா ஹாரிஸும் அமெரிக்காவுக்கு சங்கடம் தருகின்றனர். இது போல ஒரு போதும் இருந்ததில்லை” என தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப்
முன்னதாக பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காது பகுதியில் காயம் அடைந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அனால் இதற்குப்பிறகு, அதிபர் தேர்தலில் அவருக்கான ஆதரவு அதிகரித்தது.
அதோடு குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் தெரிவித்தார்.
அதோடு துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை பைடன் வழங்கி இருந்தார். ஏற்கனவே பைடனை கடுமையாக சாடியிருந்த ட்ரம்ப். மேலும், கமலா ஹாரிஸ் தேர்தலில் போட்டியிட்டால் எளிதில் வீழத்துவேன் என்றும் சொல்லி இருந்தார். இந்தச் சூழலில் தான் அதிபர் பைடனின் உரையை அவர் விமர்சித்துள்ளார்.