நள்ளிரவில் நாய் குரைத்ததால்.. 67 பேர் உயிர் தப்பிய அதிசயம் - என்ன நடந்தது?
நாய் குரைத்ததால் 67 பேர் உயிர் தப்பிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
நிலச்சரிவு பாதிப்பு
இமாசல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் தரம்பூர் பகுதியில் சியாதி என்ற கிராமம் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜூன் மாதம் இறுதியில் இருந்து கடந்த 6-ந் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.
இதனால் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், சியாதியில் ஏறக்குறைய 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு 67 பேர் வசித்து வந்த நிலையில், நாய் ஒன்று செய்த செயலால் உயிர் தப்பிய அதிசயம் நடந்துள்ளது.
நாய் எச்சரிக்கை
நிலச்சரிவுக்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்து சத்தம் எழுப்பியுள்ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்தத்தை கேட்டு கண்விழித்த அதன் உரிமையாளர் நரேந்திரா தனது வீட்டின் சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.
உடனே அவர் கிராமத்தினரை எழுப்பி எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த கிராமத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிலச்சரிவில் பல வீடுகள் தரைமட்டமாயின.
சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரிக்கை செய்ததால் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.