நாடு முழுவதும் தொடங்கிய மருத்துவர்கள் வேலைநிறுத்தம் - மருத்துவர்களின் கோரிக்கை என்ன?
கொல்கத்தா மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
கொல்கத்தா மருத்துவர் கொலை
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதி பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும், 5 கோரிக்கைகளை முன் வைத்து, நாடு முழுவதும் அரசுமற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று(17.08.2024) 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்துள்ளது.
1.) சுகாதார பணியாளர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க நாடு தழுவிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். 25 மாநிலங்களில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும், இந்தச் சட்டங்கள் களத்தில் பெரும்பாலும் பயனவற்றவையாகவே இருக்கின்றன. அவற்றால் குற்றங்களைத் தடுக்க இயலவில்லை. சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் (வன்முறை தடுப்பு மற்றும் சொத்துகள் சேதம்) மசோதா 2019 மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
2.) விமான நிலையங்களை போல் பெரிய மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
3.) உறைவிட மருத்துவர்களின் ( ரெசிடென்ட் டாக்டர்) பணி மற்றும் வாழ்விடச் சூழல்கள் மேம்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக 36 மணி நேர பணி என்பதில் மாற்றம் தேவை என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
4.) கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.ஜி.கார் மருத்துவமனையை சூறையாடியவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும்.
5.) குற்றத்தின் தன்மைக்கேற்ப கொல்கத்தாவில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு கண்ணியமான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணி முதல் நாளை(18.08.2024) காலை 6 மணி வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். இதில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவு மட்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
4 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை உறுப்பினர்களாக கொண்ட நாட்டின் மிகப்பெரிய மருத்துவ சங்கமான இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 300 க்கு மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கையில் பதாகையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூர், திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நோயாளிகளுக்கு பாதிப்பு இன்றி மருத்துவர்கள் போராடுமாறு தமிழக மருத்துவத்துறை அறிவுறுத்தியது.