பிரசவத்தின் போது வயிற்றில் டவலை வைத்து தைத்த மருத்துவர்கள் - 3 மாதமாக துடித்த பெண்
பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் துண்டை வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வயிற்று வலி
ராஜஸ்தானை சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 3 மாதங்களாக கடுமையன வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகள் சென்று வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் வலி குறையவே இல்லை. இறுதியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கே சிடி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
வயிற்றில் துண்டு
அதில் வயிற்றில் கட்டியாக ஏதோ ஒன்று இருப்பதை காண முடிந்தது. இதன் பின் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சையின் போது, வயிற்றில் 15x10 செமீ அளவில் துண்டு இருப்பது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் அந்த துண்டை அகற்றியுள்ளனர். 3 மாதங்களுக்குமுன் அந்த பெண்ணிற்கு ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிசேரியன் பிரசவம் நடந்தது.
விசாரணை
அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அந்த பெண்ணின் வயிற்றில் டவலை வைத்து தைத்துள்ளனர். வயிற்று வலி காரணமாக, அந்த பெண்ணால் குறைவாகவே சாப்பிட முடிந்துள்ளது. இதனால் குழந்தைக்கு வெளியில் இருந்தே பால் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக நடந்துள்ள இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.