பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா.. பகீர் கிளப்பிய பயிற்சி மருத்துவர் - சிக்கியது எப்படி?
அரசு தலைமை மருத்துவமனையில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனை
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அரசு தலைமை மருத்துவமனைசெயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறனர்.
இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவர்கள் ,செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தனி கழிப்பறையும், பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்படுத்துவதற்காகத் தனி கழிப்பறை உள்ளது.
இந்த நிலையில் பெண் செலிவியர் ஒருவர் நேற்று அந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்குப் பேனா வடிவிலான ரகசிய கேமரா ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜா என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
ரகசிய கேமரா..
இதையடுத்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அந்த மருத்துவமனையில் வெங்கடேஷ் என்பவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, எம்எஸ் ஆர்தோ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .
சம்பவத்தன்று சக ஊழியர்களுடன் இணைந்து வெங்கடேசும் கழிப்பறையில் சென்று ரகசிய கேமராவில் இருந்து மெமரி கார்டை எடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் வெங்கடேச்ஷிடம் விசாரணை நடத்தினர் .
கடந்த 10 நாள்களுக்கு முன்பு அமேஸான் தளத்தில் பேனா வடிவிலான கேமராவை வாங்கியுள்ளார். பிறகு சுத்தம் செய்யும் பிரஷ் ஒன்றில் லப்பர் பேண்ட் வைத்துச் சுற்றி அங்கு வைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து வெங்கடேஷை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.