44 நடைமேடை; உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் - எங்கு தெரியுமா? இந்தியாவிற்கும் பெருமை!
உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் குறித்த தகவல்.
இந்திய ரயில்வேயின் பெருமை
மனிதர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்து என்றால் அது ரயில்தான். வெளிமாநிலம், வெளியூர், வேலைக்கு, சரக்கு ஏற்றிச் செல்ல என ரயில்களை நாம் அன்றாடமாக பயன்படுத்தி வருகிறோம்.
அப்படிப்பட்ட ரயில் போக்கு வாரத்திற்கும், ரயில் நிலையங்களுக்கும் பல சிறப்புகளும் உள்ளது. அந்தவகையில் உலகின் இக நீளமான நடைமேடை என்ற பெருமையை கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையம் கொண்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி அண்மையில் திறந்து வைத்தார். இந்த நடைமேடையின் நீளம் கிட்டத்தட்ட ஒன்றரை கிலோமீட்டர். அதாவது 1,507 மீட்டர் ஆகும். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையம் என்றால் அது மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள ஹவுரா சந்திப்பு. இங்கு 26 நடைமேடைகள் உள்ளன.
உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம்
ஆனால் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது என்று கேட்டால்? அது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் தான். இந்த ரயில் நிலையம் 1903 முதல் 1913 காலகட்டத்தில் கட்டப்பட்டது.
இந்த ரயில் நிலையத்தில் 44 நடைமேடைகள் உள்ளன. அதாவது, மொத்தம் 44 ரயில்கள் ஒரே நேரத்தில் இங்கு நிற்க முடியும். இந்த நிலையம் சுமார் 48 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இரண்டு அண்டர் கிரவுண்ட் நிலைகள் உள்ளன. 41 தடங்கள் மேல் மட்டத்திலும், 26 தடங்கள் கீழ் மட்டத்திலும் செல்கின்றன.
இங்கு தினமும் சராசரியாக 660 மெட்ரோ ரயில்கள் செல்கின்றன. அதில் 1 லட்சத்து 25,000 பயணிகள் இந்த ரயில் நிலையம் வழியாக பயணிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த ரயில் நிலையத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இங்கு ரகசிய நடைமேடை தளமும் கட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் பிராங்களின் ரூஸ்வெல்ட் சக்கர நாற்காலியின் உதவியுடன் நேரடியாக இந்த நடைமேடைக்கு வந்து தனது பயணத்தை மேற்கொள்வாராம்.