விண் கல்லால் அலங்காரம்..உலகின் விலை உயர்ந்த காலணி - மதிப்பு எவ்வளவு தெரியுமா?
உலகின் விலை உயர்ந்த காலணியின் சிறப்பம்சங்களை பற்றி காணலாம்.
விலை உயர்ந்த காலணி
இத்தாலியை சேர்ந்த அன்டோனியோ வியட்ரி என்ற வடிவமைப்பாளர் ஒருவர் தான் இந்த விலை உயர்ந்த காலணியை உருவாக்கியுள்ளார். இதற்கு மூன் ஸ்டார் என்ற பெயரும் வைக்கப்படுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்த காலணி தயாரிக்கப்பட்டிருந்தாலும் தற்போது தான் இணையத்தில் பரவி மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த காலணியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலணியின் குதிகால் பகுதி முற்றிலும் தங்கத்தால் ஆனது. சுமார் 30 காரட் வைரக் கற்களால் அலங்காரம் செய்துள்ளனர்.
இந்த காலணிக்கு மேலும் மதிப்பு கூட்டும் வகையில் விண் கல்லையும் இதில் வைத்து அலங்கரித்துள்ளனர். அதாவது 1576 ஆம் ஆண்டுக்கு முன்பு பூமியில் விழுந்த விண் கல்லை இதில் பயன்படுத்தியுள்ளனர். வடிவமைப்பாளரான அன்டோனியோ வியட்ரி இதற்கு முன்பாக ஏராளமான விலை உயர்ந்த பொருட்களை உருவாக்கி இருக்கிறார்.
எவ்வளவு தெரியுமா?
கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் முதல் 24 காரட் தங்க காலணிகளை உருவாக்கியதும் இவர்தான். இதன் மதிப்பு ஏறத்தாழ ரூ. 164 கோடி வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த காலணி தான் உலகின் விலை உயர்ந்த காலணியாக தற்போது இருந்து வருகிறது.
இவற்றில் தங்கம், வைரத்துடன் விண் கல்லும் இணைக்கப்பட்டிருப்பது தான் இதன் சிறப்பம்சமாகும். கலை, வரலாறு மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இதில் சங்கமித்துள்ளன. இதனை வடிவமைத்த அன்டோனியோவுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
இந்த விலை உயர்ந்த காலணியை பார்த்த கோடீஸ்வரர்கள் பலரும், தங்களுக்கு விருப்பமான பொருட்களை உருவாக்கி தருமாறு ஆர்டர்கள் கொடுத்துள்ளார்களாம்.