வடை விநியோகித்து நூதன பரப்புரை செய்த திமுகவினர் - பின்னணியில் பிரதமர் மோடி!
பொதுமக்களுக்கு வடை விநியோகித்து திமுகவினர் நூதன பரப்புரை மேற்கொண்டனர்.
மோடி சுட்ட வடை
கோவை, கருமத்தம்பட்டியில் திமுகவினர் பொதுமக்களுக்கு உளுந்து வடை வழங்கி, பிரதமர் மோடி வாயிலே வடை சுடுவதாகவும், அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் விமர்சித்தனர்.
மேலும், “மோடி சுட்ட வடைகள்“ என்ற தலைப்பில் சில திட்டங்களை பட்டியலிட்டு, துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். தொடர்ந்து, திருப்பூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நூதன பரப்புரை
அங்கு கிரைண்டர் மூலம் மாவாட்டி மோடியின் முகமூடி அணிந்தவாறு அங்கேயே சுட சுட வடை சுட்டு கூட்டத்திற்கு வந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் என அனைவருக்கும் இது மோடி சுட்ட வடை என்று பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மூலம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன்; மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டி காட்டும் வகையில் பதாகைகளையும் அவர்கள் கையில் ஏந்தி முழக்கம் எழுப்பினர்.
இதுபோல், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் திமுகவினர் பிரதமர் மோடியை விமர்சித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.