செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்.. பாஜகவுக்கு இனி கேடு காலம் தான் -ஆர்.எஸ்.பாரதி!
அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரியான பதிலடி கொடுத்துள்ளதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி
கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து, சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்த புகாரில், கடந்தாண்டு ஜூன் மாதம், அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டது.
மேலும் 471 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வர உள்ளார். இந்த நிலையில் சென்னையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,'' உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமலாக்கத்துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய சம்மட்டியடி.
சம்மட்டியடி
திட்டமிட்டு செந்தில் பாலாஜியைச் சிறையிலேயே வைப்பதற்காகத்தான் வழக்கைக் காலதாமதம் செய்தார்கள். இனியாவது அமலாக்கத்துறை அரசியல்வாதிகளைப் பழிவாங்கும் நோக்கத்தேடு வழக்குப் போடாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது."என்று கூறினார்.
மேலும் தி.மு.கவிற்காக செந்தில் பாலாஜி கடுமையாக உழைத்தார். கொங்கு மண்டலத்தில் தி.மு.க வெற்றி பெறுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அவரை கைது செய்து உள்ளே வைத்திருந்தனர்.
தி.மு.க செல்வாக்கை யாரும் குறைக்க முடியாது என்பதற்குச் சான்றாக 40/40 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.பா.ஜ.க இனிமேலாவது திருந்த வேண்டும், இல்லாவிட்டால் கேடு காலம் தான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.