மீண்டும் அமைச்சராவாரா செந்தில் பாலாஜி? நிபந்தனைகள் என்ன?
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதல் பொறுப்பாகவும், மது விலக்கு துறை முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி, கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜாமீன்
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மாலை அல்லது நாளை காலை புழல் சிறையில் இருந்து வெளியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கின் நிபந்தனைகள் குறித்து பேசிய அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும். ரூ. 25 லட்சத்துக்கு இருநபர் உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றம்
மேலும் மீண்டும் அமைச்சராக உச்சநீதிமன்றம் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராவாரா என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செந்தில் பாலாஜியின் விடுதலைக்காகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்பதில் தாமதம் என கடந்த மாதமே குறிப்பிட்டு இருந்தோம்.
தற்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் மீண்டும் அமைச்சர் ஆக உள்ளார்.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது புதிதாக 2 இளம் அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்றும், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்ப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.