எடப்பாடி பழனிச்சாமிக்கு கண் குருடு.. ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு இதுதான் காரணமா?
எதையும் மூடி மறைக்கும் பழக்கம் திமுகவிற்குக் கிடையாது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி
நெல்லை மாவட்டம் வண்ணார் பேட்டையில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்றத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றிய தொண்டர்கள் என 136 பேருக்குப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்த போது பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார் . அப்போது முதலமைச்சர் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றுள்ளார் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தது குறித்துக் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த அவர்,'' எடப்பாடி பழனிச்சாமிக்கு கண் குருடு. முதலமைச்சர் ஸ்டாலின் சிக்காக்கோவில் சைக்கிள் ஓட்டியதை எடப்பாடி பார்க்கவில்லையா? அவரை சைக்கிள் ஓட்ட சொல்லுங்கள் பார்க்கலாம் என்று கூறினார். மேலும் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல், அவர் நெருக்கடியில் உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
கூட இருந்தவர்கள் இருப்பார்களா என்ற சந்தேகம் வந்தால் என்ன சொல்வதென்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடல் நலத்துடன் சிறப்பாக இருப்பதை ஊடகங்களில் பத்திரிக்கைகளில் பார்க்கின்றனர்.
எதையும் மூடி மறைக்கும் பழக்கம் திமுகவிற்குக் கிடையாது என்று கூறினார்.
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் போது பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதே போல் வரும் பொழுது பத்திரிகையாளர்களைச் சந்தித்து என்னென்ன சாதித்தார் என்பதைச் சொல்வார் என்று கூறினார்.