தமிழக கவர்னரை மாற்ற கோரி தீக்குளிக்க முயற்சித்த திமுக தொழிற்சங்க தலைவர் - மதுரையில் பரபரப்பு!
தமிழ்நாட்டின் கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற கோரி தீ குளிக்க முயற்சித்த திமுக கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக கட்சியினர்
மதுரை மாவட்டம், மானகிரி பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவர் ஆவின் தி.மு.க. தொழிற்சங்க தலைவராக உள்ளார்.
இவர் ஜூன் 27-ந் தேதிக்குள் தமிழக கவர்னரை மத்திய அரசு மாற்றாவிட்டால், 28-ந் தேதி மதுரை சிம்மக்கலில் உள்ள கருணாநிதி சிலை முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து சாவேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டியிருந்தார். இதுபோல பல்வேறு கட்சியினர் ஆளுநரை மாற்றுவதற்கு கோரிக்கை வைத்தனர்.
பரபரப்பு
இந்நிலையில், இவர் சபதம் விடுத்ததால் இன்று அவர் வரலாம் என்று எண்ணி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு திடீரென காரில் வந்த கணேசன், கருணாநிதி சிலை முன்பாக தான் வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர். தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் இந்த போராட்டம் மதுரையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.