மதமும் அரசியலும் ஒன்றாக கலந்தால் இதுதான் நடக்கும் - நாடாளுமன்றத்தில் சீறிய கனிமொழி
சிறுபான்மை மக்களை அனைத்து வகையிலும் மத்திய அரசு அச்சுறுத்துவதாக கனிமொழி எம்.பி பேசினார்.
கனிமொழி
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பாராளுமன்ற உரையில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, கும்பமேளா நெரிசல் உயிரிழப்பு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.
இதில் பேசிய அவர், "கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மதமும் அரசியலும் ஒன்றாக கலந்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவல் கூட அரசிடம் இல்லை.
சிறுபான்மை மக்கள்
இந்தியா பல்வேறு மதங்கள், இனங்கள், கலாச்சாரங்கள், மொழிகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மையோடு உள்ள நாடு. ஆனால் இந்திய பாராளுமன்றத்தில் இஸ்லாமிய உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஓபிசி, எஸ்.சி, எஸ்டி பிரிவில் இருந்து வரும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார்வல்லபாய் படேல், இந்தியா பாகிஸ்தானை போல் செயல்பட முடியாது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, இங்கு உள்ள அணைத்து இஸ்லாமியர்களின் உரிமைகளும் காக்கப்படும் வேண்டும் என கூறினார். அரசு அவரை உண்மையாக போற்றுவதாக இருந்தால் அவருக்கு பல கோடிகளில் சிலை வைப்பதற்கு பதிலாக அவர் சொன்ன வார்த்தைகளை பின்பற்ற வேண்டும்.
ஆனால் இந்த அரசு, சிஏஏ, முத்தலாக் சட்டம், பொது சிவில் சட்டம், வக்பு சட்ட திருத்தம் என அனைத்து வகையிலும் சிறுபான்மையினத்தவர்களை அச்சுறுத்துகிறது. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஒரே மாநிலமான காஷ்மீரை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது" என பேசினார்.