திமுக கூட்டணியில் 25 தொகுதி கேட்கும் விசிக - அமைச்சர் கொடுத்த பதில்
2026 தேர்தலில் விசிக 25 தொகுதிகள் பெற வேண்டும் என அக்கட்சி நிர்வாகி தெரிவித்துள்ளார்.
25 தொகுதி
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள நிலையில் இப்போது முதலே திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.
இந்நிலையில் விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, "வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவிற்கு 25 தொகுதிகள் கேட்டு பெற வேண்டும். இது நமது கட்சிக்கான சரியான நேரம்" என பேசியிருந்தார்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
இது தொடர்பாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தும்போதுதான் இது குறித்து முடிவு செய்வோம். முன்னதாகவே நிபந்தனை விதிக்க மாட்டோம். கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும் என எண்ணுவது இயல்பான ஒன்றுதான்" என பேசியிருந்தார்.
இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளதால், இப்போது தொகுதி பங்கீடு குறித்து பேச தேவையில்லை. திமுக, அதிமுகவை போல கூட்டணி கட்சிகளை வெளியேற்றாது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் இப்போதும் கூட்டணியில் தொடர்கின்றன. அதற்கு காரணம் முதல்வர் கூட்டணி கட்சிகளை மதிக்கும் பண்புதான்" என கூறியுள்ளார்.