பாஜகவிடம் சரணாகதி அடைந்து விட்டது திமுக - முன்னாள் அதிமுக அமைச்சர் கடும் விமர்சனம்..!
மத்திய பாஜக அரசிடம் திமுக சரணாகதி அடைந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களின் குரலாக ஒலிப்போம்..
தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்த அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியது வருமாறு,
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் குரல் தமிழ்நாடு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் என்று குறிப்பிட்டு, தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகளை அமைத்திருக்கின்றோம் என்று தகவல் அளித்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் அதிமுக இருந்தது போல வலிமையோடு களத்தில் நிற்க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார் என்று புகழாரம் சூட்டி, பொதுச் செயலாளரின் வியூகம் 100% தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் வெற்றியைத் தேடித் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
சரணாகதி..
மாநில உரிமைகளுக்காக போராடி வருகிற, உழைத்து வருகிற, மாநில உரிமையை மையமாக வைத்து களம் காணும் அதிமுகவை தோளோடு தோள் கொடுத்து துணை நிற்கிற அனைத்து கட்சிகளையுமே வரவேற்கிறோம் என்று கூட்டணி குறித்து பேசிய ஆர்.பி. உதயகுமார்,
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம் என்பதை அதிமுக பொதுச் செயலாளர் அடிக்கடி தெளிவு படுத்தி வருகின்றார் என்பதையும் குறிப்பிட்டார்.
திமுக மத்திய பாஜகவிடம் சரணாகதி அடைந்து இருக்கிறது என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அவர், உடல் ஓர் இடத்திலும் உள்ளம் ஒரு இடத்திலுமாக திமுக இருக்கிறது என்றும் அதிமுகவை பொறுத்தவரை உடலும், உள்ளமும், உறுதியும் தமிழ்நாடு மக்களின் நலனின் நலனை மையப்படுத்தி தான் இருக்கிறது என்று கூறினார்.