பெண்களை இழிவுபடுத்தி பேசிய வானதி சீனிவாசன் - குவியும் புகார்கள்!
கோவையில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பொதுகூட்டத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்துள்ளது.
பொதுக்கூட்டம்
கோவையில் வி.கே.கே. மேனன் சாலையில் கடந்த மாதம் 29-ம் தேதி பாஜக சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
அப்பொழுது பேசிய இவர் பெண்களுக்கு எதிராக அவதூறு பேசியாதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தி.மு.க-வை சேர்ந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
புகார்
இந்நிலையில், பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிடம் தி.மு.க. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் அவர் கூறியது, "வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி எங்கள் கட்சியினரை இழிவுப்படுத்தி உள்ளார்.
அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது" என்று கூறியிருந்தார். மேலும், கோவையில் உள்ள காவல் நிலையங்களில் மொத்தம் 17 இடங்களில் திமுகவினர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.