உறுதி கொடுத்த அதிமுக - ராஜ்ய சபா எம்.பி'யாகும் எல்.கே.சுதீஷ்..?
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிமுக - தேமுதிக கூட்டணி
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது தேமுதிக. கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைந்ததை அடுத்து கட்சிக்கு அனுதாப வாக்குகள் வரலாம் என்ற கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதன் காரணமாக, அதிமுக தரப்பில் இருந்து தேமுதிகவிற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், கடலூர், திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, தஞ்சாவூர் போன்ற தொகுதிகளில் தேமுதிக போட்டியிடவுள்ளது.
நேற்று கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா விஜய்காந்த், மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என குறிப்பிட்டு, மீண்டும் 2011-ஐ போல வரலாறு படைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மாநிலங்களவை எம்.பி
பிரேமலதா பேசியதில் மிகவும் முக்கியமான ஒன்று, தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக உறுதி அளித்துள்ளது என்பதே. மாநிலங்களவை எம்.பி பதவி என்பது நாட்டில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அப்படி அதிமுக சார்பில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டால் அது நிச்சயமாக எல்.கே.சுதீஷிற்கு தான் இருக்கும் என்று பெரும்பாலும் பேசப்படுகிறது. மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பிரேமலதா, சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட விரும்புவார்.
அப்படி இருக்கும் நிலையில், ராஜ்ய சபாவிற்கு தேமுதிக தரப்பில் சுதீஷ் தான் தேர்வாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.