வெளுக்கும் கோடை வெயில்; ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டது - மாநகராட்சி வினியோகம்!
சென்னையில் 75 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
கோடை வெயில்
அதிகமான வெப்பம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது. வழக்கம்போல் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது.
அதோடு வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கோடை வெப்பத்தை எதிர் கொள்ளும் வகையில் பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு,
ஓ.ஆர்.எஸ். கரைசல்
குடிநீர் வசதிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி சார்பில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நகர்ப்புற நலவாாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 மகப்பேறு மருத்துவமனைகளிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்படுகிறது.
மேலும், 75 பொது இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் இன்று முதல் வழங்கப்படுகிறது. கோடை வெயில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வெப்பம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்த மருந்துகளும், 2.96 லட்சம் ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் கையிருப்பில் உள்ளன. எனவே அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் திறந்த இடங்களில் பணியாற்றுவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.