திருப்பதி லட்டு சர்ச்சை; களமிறங்கிய ஆவின் - அதிகாரிகள் சொன்ன குட்நியூஸ்!
திருப்பதி லட்டு குறித்த சர்ச்சையில் ஆவின் நிறுவன அதிகாரிகள் முக்கிய தகவல் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திருப்பதி லட்டு தயாரிக்க ஆவின் நெய் விநியோகம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆவின் முடிவு
இந்நிலையில் இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், ”திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கான உயர்தரமான, சுவையுடைய நெய்யை ஆவின் நிறுவனமே விநியோகம் செய்து வந்தது.
ஆனால், 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நெய் மிகவும் குறைந்த விலைக்கு கேட்கப்பட்டதால் ஆவின் நிறுவனம் சார்பில் நெய் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உயா்தர நெய்யை திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விநியோகம் செய்வதற்கு தயாராக உள்ளது.
நெய்யிற்கான உரிய விலை அளித்து வாங்க திருப்பதி தேவஸ்தானம் ஒப்புக் கொண்டால், ஆவின் சார்பில் மீண்டும் நெய் விநியோகம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.