ஒத்து வராத ஆம் ஆத்மீ - பேசி வரும் காங்கிரஸ்..! தவிக்கும் டெல்லி I.N.D.I கூட்டணி..!
டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் தொகுதி பங்கீடு காங்கிரஸ் ஆம் ஆத்மீ கட்சிக்கு இடையே குழப்பம் நீடித்து வருகின்றது.
ஆம் ஆத்மீ காங்கிரஸ்
மத்திய பாஜக ஆட்சியை எதிர்க்க, தேசிய அளவில் காங்கிரஸ் - ஆம் ஆத்மீ கூட்டணி அமைந்துள்ளது. ஆனால், மாநில அளவில் தங்கள் வாக்கை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க ஆம் ஆத்மீ விரும்பவில்லை என்று தான் தெரிகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் இருக்கும் 7 தொகுதிகளையும் மொத்தமாக பாஜக கைப்பற்றியிருந்தது. இதில் இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் வாக்கு 22.51 சதவீதமாகும். 3-ஆம் இடம் பிடித்த ஆம் ஆத்மீ 18.11% மட்டுமே கைப்பற்றியது.
இந்த சூழலில் தான் வரும் தேர்தலில், 4 சீட் ஆம் ஆத்மீ - 3 சீட் காங்கிரஸ் என போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்து கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இதற்கு ஆம் ஆத்மீ கட்சி தற்போது வரை இசையவில்லை.
காரணம், சட்டமன்ற தேர்தலில் டெல்லியில் மொத்தமுள்ள 70 இடங்களில் 62-ஐ கைப்பற்றி 53.57% வாக்குகளை பெற்றிருந்தது ஆம் ஆத்மீ. இதன் அடிப்படையில் இந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றி பெரும் முனைப்பில் இருக்கும் ஆம் ஆத்மீ காங்கிரஸ் கட்சியின் முன்னெடுப்பிற்கு சம்மதிக்க சற்று தயக்கம் காட்டி வருகின்றது குறிப்பிடத்தக்கது.