கொடூரமாக தாக்கிய காட்டு யானை; மாற்றுத்திறனாளி பரிதாப பலி - மக்கள் போராட்டம்!
காட்டுயானை தாக்கியதில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காட்டுயானை தாக்குதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் வன விலங்குகளில் தாக்குதலில் மக்கள் யிரிழப்பது வழக்கமாக நடந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்துவருகின்றனர்.
தங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கும், வனத்துறைக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரம்பாடி பகுதியை சேர்ந்த குமார் (46) என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
மாற்றுத்திறனாளியான இவர் சேரங்கோடு பகுதியில் இருந்து கோரஞ்சல் செல்லும் வழியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது காட்டுயானை ஒன்று குமாரை கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை வனத்துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மக்கள் போராட்டம்
இந்நிலையில் அப்பகுதி பகுதியில் பொதுமக்கள், ஏற்கனவே இப்பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது மாற்றுத்திறனாளி உயிரிழந்துள்ளதால் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,
வனப்பகுதியை சுற்றி மின் வேலி அமைக்க வேண்டும் அல்லது அகழி வெட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் சேரன்கோடு சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.