சொந்த அம்மாவால் நேர்ந்த கதி; YouTube பார்த்து மகன் செய்த காரியம் - சிக்கியது எப்படி?
தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை சம்பவம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் நகை கடன் வழங்கும் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு நேற்று காலை ஒரு பெண் உட்பட 3 ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி கதவை திறக்கும்படி ஊழியர்களை மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், மேலாளரிடம் சாவி இருப்பதாக கூறியுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர், ஊழியர்களின் கைகளை கயிற்றால் கட்டினார்.
பின்னர் நிறுவனத்தின் ஷட்டர் கதவின் பூட்டை உடைக்க முயன்றுள்ளார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலிக்கத் தொடங்கியதால், மர்ம நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இளைஞர் கைது
உடனே ஊழியர்கள் கத்தி கூச்சலிட்டதால் பொதுமக்கள் அந்த மர்ம நபரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து வத்தலக்குண்டு போலீசில் அவர் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் கொடைரோட்டை சேர்ந்த அமர்நாத் (25) என்பதும்,
எம்.பி.ஏ. பட்டதாரியான அவர் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அமர்நாத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அமர்நாத் போலீசாரிடம் கூறுகையில் "என்னுடைய தாயார் ரூ.20 லட்சம் கடன் வாங்கி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
அவர் வாங்கிய கடனை அடைப்பதற்காக யூடியூப் மூலம் எப்படி கொள்ளை அடிப்பது என்று பார்த்தேன். அதன்படி தேவையான கருவிகளை வாங்கினேன். பின்னர் வத்தலக்குண்டுவில் உள்ள நிதி நிறுவனத்தை தேர்வு செய்து வந்தேன். ஆனால் மாட்டிக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.